தமிழர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு
திருகோணமலை (Trincomalee)- சாம்பல் தீவுப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து 254 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நேற்று (7) இரவு இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
நிலாவெளி, சாம்பல் தீவு வீதியில் சல்லி கோயிலுக்கு பின்னால், அமைந்துள்ள, தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்தே இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு முறைப்பாடு
காணி உரிமையாளர், தனது காணியை, கூலி ஆட்கள் போட்டு துப்புரவு செய்து கொண்டிருந்தபோதே, இங்கு கருகிய நிலையில் பழைய தோட்டாக்கள் அடங்கிய பையொன்று இருப்பது தெரிய வந்ததாகவும், இது குறித்து அருகில் உள்ள கடற்படை தளத்துக்கு அறிவித்ததாகவும் தெரிய வருகின்றது.
இதனையடுத்து, கடற்படையினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொலிஸாருக்கு குறித்த தகவலை முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொரிஸார் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் அறிக்கை
பழைய T56 துப்பாக்கி தோட்டாக்கள் 245 உம், ரேஷர் துப்பாக்கி வெற்று தோட்டாக்கள் 03 உம், mpmg துப்பாக்கி தோட்டாக்கள் 06 உம் அந்தப் பைக்குள் அடங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த வெடிபொருட்கள் குறித்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |