நடுவானில் நடந்த பரபரப்பு - அவசரமாக சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்ட இஸ்ரேலிய விமானம்

Dubai Israel Saudi Arabia
By Independent Writer Sep 30, 2026 10:21 AM GMT

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் நோக்கிப் பயணித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிளைடுபாய் விமானம், விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கைக்கலப்பு மற்றும் தொடர்ந்து விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கைகள் காரணமாக சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த போதே விமானம் கட்டுப்பாட்டை இழந்து 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் வரை சடாரெனக் கீழே இறங்கியதாகவும், உடனடியாக அவசர சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், வடமேற்கு சவூதி அரேபியாவிலுள்ள தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

பாதுகாப்பாக தரையிறங்கிய 150 பயணிகள்

இஸ்ரேலுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிராத சவூதி அரேபியாவில் இந்த விமானம் தரையிறங்கியமை இஸ்ரேலியப் பாதுகாப்புத் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் நடந்த பரபரப்பு - அவசரமாக சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்ட இஸ்ரேலிய விமானம் | 150 Passengers Landed Safely

இருப்பினும் இது விமானக் கடத்தல் சம்பவம் அல்ல என்றும், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

விமானத்திலிருந்த 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியப் பயணிகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும், விமானத்திற்குள் கத்திக்குத்து மற்றும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகப் பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

விமானிகளை மீட்டெடுக்கவும் பயணிகளைப் பாதுகாப்பாகத் தாய்நாடு அழைத்து வரவும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.