பட்டினியில் வாடும் காசா மக்கள்:பயணிக்கவிருக்கும் மனிதாபிமான உதவி பாரவூர்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வந்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் வரத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, போர் நிறுத்தத்தின் முதல் இரண்டு நாட்களில் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட உதவி பாரவூர்திகளின் வருகை தாமதமானாலும், எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் 400 உதவி பாரவூர்திகளும், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண நிறுவனம் மூலம் 100 பாரவூர்திகளும் நேற்று காசா பகுதிக்கு வரவிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
இதேவேளை, உதவி பாரவூர்களுக்கு மேலதிகமாக, 50 எரிபொருள் பவுசர்களும் நேற்று காசா பகுதிக்கு வரவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9,000 தொன் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்
அத்துடன், எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் நேற்று 9,000 தொன் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவிருந்தது.
மேலும் இஸ்ரேலிய தாக்குதல்களிலிருந்து காசா பகுதியின் வடக்கே தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே தெற்குப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உணவை விநியோகிக்க சர்வதேச ஆதரவு
பல மாதங்களாக கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்தித்து வரும் பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான உணவை விநியோகிக்க சர்வதேச ஆதரவும் கிடைத்துள்ளது.
அத்தோடு, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, காசா பகுதிக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 600 உதவி பாரவூர்திகள் தேவைப்படுகின்றன.
மேலும் வரும் நாட்களில் இந்தத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று ஐ.நா. மனிதாபிமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |