டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்த இரண்டு டிப்பர்கள் சிக்கின: சாரதிகள் கைது
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதி 94 கட்டைபகுதியில், கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வாகன சோதனையில், டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், டீசலின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால், அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் இந்த மோசடி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து பயன்படுத்துவது சட்டவிரோத செயல் என்பதுடன், இது வாகனங்களின் என்ஜினுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவும் கந்தளாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.